உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி -கூடலுார் சாலையோர காட்டு செடிகளால் விபத்து அபாயம்! வளைவுகளில் அடிக்கடி மோதி கொள்ளும் வாகனங்கள்

ஊட்டி -கூடலுார் சாலையோர காட்டு செடிகளால் விபத்து அபாயம்! வளைவுகளில் அடிக்கடி மோதி கொள்ளும் வாகனங்கள்

ஊட்டி ; மூன்று மாநில வாகனங்கள் அதிக அளவில் செல்லும், ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்துள்ள புதர் செடிகளால், வளைவுகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டம் பர்லியார் முதல் குன்னுார், ஊட்டி, பைக்காரா, கூடலுார், கக்கனல்லா வரையிலான சாலை, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர், கூடலுார் முதல் பைக்காரா மற்றும் ஊட்டி வரையிலான சாலையை பயன்படுத்துகின்றனர். அதில், கூடலுார் முதல் ஊட்டி வரை தினமும் அரசு பஸ், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என சராசரியாக, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

விபத்து அபாயம்

அதில், 'கூடலுாரில் இருந்து நடுவட்டம், பைக்காரா, சூட்டிங் மட்டம், தலைக்குந்தா,' என, 30 கி.மீ. , சாலையின் இரு புறமும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காட்டு செடிகள் வளர்ந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விதிகள் குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு போர்டுகள் அனைத்தும் புதருக்குள் மறைந்துள்ளன. இதனால், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். மேலும், சாலைகளில் ஆங்காங்கே குதிரைகள் , கால்நடைகள் கூட்டமாக நின்று வழிமறிப்பதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையின் இருபுறம் வளர்ந்துள்ள காட்டு செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு சுற்றுலா பயணி ரமேஷ் கூறுகையில், ''சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறேன். பெங்களூருவில் இருந்து அடிக்கடி ஊட்டிக்கு சுற்றுலா பயணியரை அழைத்து வருவது வழக்கம். கூடலுாரில் இருந்து நடுவட்டம் தலைக்குந்தா வரை சாலையின் இருப்புறம் வளர்ந்துள்ள காட்டு செடிகளால் வாகனங்களை இயக்க திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், சாலையில் உலா வரும் குதிரை மற்றும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், கால்நடைகளை கட்டுப்படுத்தவும், புதர் செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

20 வழக்குகள் பதிவு...

கூடலுார் முதல் ஊட்டி வரையிலான சாலையில் முட்புதர் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. கடந்த இரண்டு மாதங்களில் நடுவட்டம், பைக்காரா, புதுமந்து போலீஸ் ஸ்டேஷன்களில் புதர் செடிகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், வளைவுகளிலும், சிறிய விபத்துக்கள் ஏற்பட்டு, 20 வழக்குகள் பதிவாகி உள்ளது. நடவடிக்கை எடுக்காமல் விட்டால், விபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ