உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சீரமைக்கப்படாத பாலமலைப் பாதையில் தொடரும் விபத்துக்கள்! வாகனங்களை இயக்குவதில் எச்சரிக்கை தேவை

சீரமைக்கப்படாத பாலமலைப் பாதையில் தொடரும் விபத்துக்கள்! வாகனங்களை இயக்குவதில் எச்சரிக்கை தேவை

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை மலைப்பாதையில் தொடரும் விபத்துக்களால் வாகனங்களை இயக்குவதில் தகுந்த நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை அரங்கநாதர் கோவில்உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். அதே போல மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை சிறப்பு பஜனை நடக்கும். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபடுவர்.அதேபோல வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பாக நடக்கும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடக்கும் பவுர்ணமி தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் நடக்கும் இவ்விழாவில் கோவை மட்டுமல்லாமல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும், திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

தொடரும் விபத்துக்கள்

இக்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார், 4 கி.மீ., தொலைவில் மலை மீது உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரின் கிராமப்புற சாலைகள் இணைப்பு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் பாலமலை அடிவாரத்தில் இருந்து குஞ்சூர்பதி மலை கிராமம் வரை சுமார், 25 அடி அகலத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. அவை தற்போது பல இடங்களில் பழுதாகி வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா பாலமலை அரங்கநாதர் கோவிலில் விமர்சையாக நடந்தது. விழாவில், கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான வாகனங்களில், பக்தர்கள் பாலமலை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.விழா முடிந்து திரும்பி வரும்போது வேகமாக வந்த ஜீப் ஒன்று, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பாலமலைசாமி,68, மீது மோதியது. இதில் பாலமலை சாமிக்கு தோள்பட்டை, தலை, இடது காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இவர் பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதே போல மலை பாதையில் இருசக்கர வாகனங்களில் வேகமாக வந்த நபர்கள் நிலை தடுமாறி, பள்ளங்களில் விழுந்து காயம் அடைந்தனர். விழாவை ஒட்டி, மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மண் கொட்டி நிரப்பப்பட்டுள்ளதால், அதில் விழுந்து, சரிந்து ஏராளமானோர் காயம் அடைந்தனர். இம்மலைப்பாதை வனத்துறையினருக்கு சொந்தமானது என்பதால், திருச்சியில் உள்ள வனத்துறையினரின் பொறியியல் பிரிவினர் மட்டுமே இச்சாலையை பழுது பார்த்து, செப்பனிட வேண்டிய சூழல் உள்ளது.

அகலப்படுத்த வேண்டும்

தற்போது உள்ள மலை பாதையின் ஓரத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இவை தார் ரோட்டை மேலும் சேதப்படுத்தாமல் தடுக்கலாம். ஆனால், இவை மட்டுமே விபத்தை தடுக்க உதவாது. தற்போது சுமார், 25 அடி அகலம் உள்ள ரோடு, 40 அடி அகலம் கொண்ட மலைப்பாதையாக மாற்ற வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மலை பாதையை செப்பனிட்டு, பராமரிக்க வேண்டும். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,' பாலமலை வட்டாரத்தில் பெரும்பதி, பெருக்கைப்பதி, பெருக்கைபதிப்புதூர், மாங்குழி, பசுமணி, குஞ்சூர்பதி, பசுமணி புதூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இம்மலைப் பாதையை நம்பியே உள்ளனர். இவை போதுமான பராமரிப்பு இல்லாததால் மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் கல்வி, வேலை வாய்ப்பு தேடி பெரியநாயக்கன்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடி பெயர்ந்து விட்டனர்.இம்மலைப்பாதையை சரியாக செப்பனிட்டு, அகலப்படுத்தினால் பக்தர்கள் மட்டுமல்லாமல் பழங்குடியின மக்களும் பயன் பெறுவர். விபத்துகளை தடுக்க வாகனங்களில் செல்பவர்கள், தகுந்த போக்குவரத்து நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என்றனர்.

விபத்துக்கான காரணம்

பாலமலை மலைப்பாதையில் நடக்கும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு காரணம் அதிவேகம் மற்றும் மலை பாதையில் வாகனங்களை இயக்குவதில் போதிய அனுபவமின்மையே என, ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கு குறுகிய வளைவுகள் கொண்ட உயரமான மேட்டுப்பாதை இருப்பதால், வாகனங்களை இயக்குவதில் பெரும்பாலானோர் திணறுகின்றனர். மலைப் பாதையில், எவ்வித போக்குவரத்து எச்சரிக்கை பலகைகளும் இல்லை. திருவிழா காலங்கள் மட்டுமல்லாமல், சாதாரண நேரங்களிலும் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ