கூடலுார்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக நீலகிரி, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முதுமலை, பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். இதனால், இரவில் நீலகிரி, கேரளாவில் இருந்து, கர்நாடக செல்லும் வாகனங்கள் முதுமலை நுழைவாயில் பகுதியான தொரப்பள்ளியிலும், கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் பந்திப்பூர் புலிகள் காப்பகம் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்படுகிறது. இவிரல், பயணிகள் வசதிக்காக, இச்சாலையில் இரு மார்க்கத்திலும் தலா, மூன்று மாநிலத்துக்கு சொந்தமான தலா இரண்டு அரசு பஸ்கள் இயக்கி வருகின்றனர். பயணிகள் பெரும்பாலும் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். இதனால், வார விடுமுறை நாட்கள், முக்கிய பண்டிகை நாட்களில் இரவில் பஸ் கிடைக்காமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வாக, வார விடுமுறை, முக்கிய பண்டிகை நாட்களில், இரவில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தி உள்ளனர். பயணிகள் கூறுகையில், 'நீலகிரி மற்றும் கேரளாவை சேர்ந்த பலரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு பகுதிகளில் உயர்கல்வி பயின்று வருவ துடன், தனியார் நிறுவனங்களிலும் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வார விடுமுறை, பண்டிகை காலங்களில், இரவு நேரத்தில் ஊருக்கு வந்து செல்ல பஸ் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். சிரமத்தை தவிர்க்க இரவு நேரத்தில், கூடுதல் அரசு பஸ்களை இயக்க, மூன்று மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.