மதமாற்றத்தில் சிக்கும் மண்ணின் மைந்தர்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா பழங்குடியினர் கலாசாரம்?
பந்தலுார்: 'பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், பழங்குடியின மக்களின் ஏழ்மையை போக்குவதாக கூறி சிலர் மதமாற்றத்தில் ஈடுபடுவதால், பழங்குடியின சமுதாயம் அழியும் நிலையில் உள்ளது,' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மண்ணின் மைந்தர்கள் என்ற பெயர் பெற்ற இவர்களில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் மிககுறைந்த அளவில் வாழ்ந்து வருகின்றனர். அதனால், இவர்கள் அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் களாக உள்ளனர். இவர்களின் கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட குடும்பத்தில் பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்கள் பாரம்பரிய முறைப்படி பிற சமுதாய மக்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது. ஆனால், சமீப காலமாக, இவர்களின் ஏழ்மை நிலையை மாற்றுவதாக கூறி, ஒரு கும்பல் மதமாற்றம் செய்து வருகிறது. இதனால், மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின், பாரம்பரிய வழக்கங்கள் மறைந்து வருவதுடன், தங்களை பழங்குடியின மக்கள் என்று கூறுவதை கூட விரும்பாத நிலைக்கு மாறி வருகின்றனர். காட்டு நாயக்கர் சமுதாய தலைவர் சந்திரன் கூறுகையில், ''பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் சமீப காலமாக, பழங்குடியின மக்கள் மத்தியில் மதமாற்றம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, பன்னிக்கல் பழங்குடியினர் கிராமத்தில், காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த, 20 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களில், 16 குடும்பங்களை மதமாற்றம் செய்து, இவர்களை வேலைக்கு போக விடாமல் தடுத்து தினசரி, பெந்தகோஸ்தே சபைக்கு அழைத்து சென்று சிலர் மூளை சலவை செய்து வருகின்றனர். இதனால் இந்த கிராமத்தில் பழங்குடியின சமுதாயம் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதே நிலை பெரும்பாலான பழங்குடியினர் கிராமங்களில் அதிகரிக்கும் நிலையில், இது குறித்து மாவட்ட எஸ்.பி., முதல்வரின் தனிப்பிரிவு, பழங்குடியினர் நல அதிகாரிகள் என அனைவருக்கும் புகார் அனுப்பியும், அதிகாரிகள் யாரும் இதனை கண்டு கொள்வதில்லை. கிராமத்தில் சென்று நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றால், மதமாற்ற கும்பல் எங்களை தாக்க முற்படுகின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இவர்களுக்கு இந்த அதிகாரம் அளிப்பது யார் என்பது தெரியவில்லை. எனவே, அழிந்து வரும் மண்ணின் மைந்தர்களை காப்பாற்ற, மதமாற்ற கும்பலிடம் இருந்து சமுதாய மக்களை மீட்க வேண்டும். சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் கூறுகையில்,'' இந்த புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும். அதனை தொடர்ந்து, கலெக்டருக்கு தகவல் தெரிவித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, பழங்குடியினர் புகார் அளிக்கலாம்,'' என்றார்.