உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மலைகாய்கறி உற்பத்தியை அதிகப்படுத்த கிராமங்களில் விழிப்புணர்வு! விதைகளை அடுத்த பருவம் வரை சேமிக்கவும் அறிவுரை

நீலகிரி மலைகாய்கறி உற்பத்தியை அதிகப்படுத்த கிராமங்களில் விழிப்புணர்வு! விதைகளை அடுத்த பருவம் வரை சேமிக்கவும் அறிவுரை

ஊட்டி; நீலகிரி மலை காய்கறி உற்பத்தியை அதிகப்படுத்தவும், லாபம் ஈட்டும் வகையில் சந்தைப்படுத்தவும் தோட்டக்கலை துறையினர் விவசாயிகள் மத்தியில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தோட்டக்கலை துறையினர் மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வேளாண்மை விதை பரிசோதனை நிலையமும், 'விதைப்பு பணிக்கு முன்பாக பிரதான காய்கறிகளை கட்டாயம் விதை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தி வருகின்றனர்.

சிறு விவசாயிகள் ஆர்வம்

இந்நிலையில், தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலை காய்கறிகள்; இங்கிலீஸ் காய்கறிகளை லாபம் ஈட்டும் வகையில் எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும் என்பது குறித்து, வேளாண் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகள் அந்தந்த வட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நடப்பாண்டில் 'கார்போகம், கடைபோகம், நீர்போகம்' என, மூன்று பருவங்களில் மலை காய்கறி விவசாயத்தை அதிகப்படுத்த தோட்டக்கலை துறை விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகளும் ஆர்வமாக தோட்டங்களை தயார் செய்து, தற்போதைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு விதைப்பு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

831 விதை மாதிரி பரிசோதனை

மேலும், வேளாண்மை விதை பரிசோதனை நிலையம் விவசாயிகளுக்கு மாதிரி விதை அளவை அறிவித்து, விதை பரிசோதனை செய்ய அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, பிரதான காய்கறிகளான கேரட், காலிப்பிளவர் மற்றும் முட்டைகோஸ், 10 கிராம்; பீட்ரூட் மற்றும் முள்ளங்கி, 50 கிராம்; பீன்ஸ், 450 கிராம்; பட்டாணி, 250 கிராம்; பாலக்கீரை 25 கிராம்; புரொக்கோலி, நுால்கோல், டர் நீப் ஆகியவை, 10 கிராம்,' என, குறைந்தபட்ச விதை மாதிரியை விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. கடந்த, 2024- 25ல் இதுவரை, மாவட்டத்தில், 831 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கட்டாயம் கடைப்பிடிக்கணும்

விதை பரிசோதனை நிலைய உதவி அலுவலர் நவீன் கூறுகையில்,''வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் விதைகளின் முக்கிய பங்கு உள்ளது. விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடு பொருட்களையும் ஏற்று கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்பு பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது,'' என்றார். வேளாண் மார்க்கெட்டிங் பிரிவு உதவி அலுவலர் கலைவாணி கூறுகையில்,''விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளில், நல்ல லாபம் ஈட்டும் வகையில் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து, கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தவிர, பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை