பசுமை பட்டாசுகளை வெடிக்க முன்வரணும்; மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்
ஊட்டி : 'குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகிறது.பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர், நோய்வாய் பட்ட வயோதிகர்கள், உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.நடப்பாண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரையிலும், இரவு, 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை வெடிக்கணும்
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சுற்று சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் , பொறுப்புமாகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மை கொண்ட, பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிப்பாட்டு தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.