உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கூடலூர் வனக்கோட்டத்தில் அரிதாக காணப்படும் கருமந்திகளுக்கு ஆபத்து!

 கூடலூர் வனக்கோட்டத்தில் அரிதாக காணப்படும் கருமந்திகளுக்கு ஆபத்து!

கூடலுார் வனக்கோட்டத்தில் அரிதாக காணப்படும்... இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் அழிவுகூடலுார்: கூடலுார் வனப்பகுதியில் அழிவின் பிடியில் உள்ள கருமந்திகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் பல அரிய வகை விலங்குகள், பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. அதில், அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்குகள் கீழ்நாடுகாணி வனப்பகுதியிலும், பாறு கழுகுகள், கழுதைப்புலிகள் முதுமலை, மசினகுடி, மாயாறு பள்ளத்தாக்கு பகுதியிலும் காணப்படுகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாக காணப்பட்ட அரிய வகை கருமந்திகள் எண்ணிக்கை குறைந்து வாழ்விடமும் சுருங்கி வருகிறது. இவை, கூடலுார் ஓவேலி, குண்டம்புழா, நாடுகாணி மற்றும் நடுவட்டம் பகுதிகளில் குறிப்பிட்ட சில வனங்களில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. இதன் இறைச்சி, மருத்துவ குணம் கொண்டதாக கூறி, வேட்டையாடி வருவதாலும், காடுகள் அழிக்கபட்டதாலும், இங்கும் இதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாவட்டத்தில், அழிவின் விளிம்பில் உள்ள, பாறு கழுகுகள், சிங்கவால் குரங்குகள், கழுதைப்புலி வரிசையில் இவைகளும் சேர்ந்துள்ளன. வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கருமந்திகள் மரங்களை வழித்தடமாக கொண்டு, இடம் பெயர்ந்து வருபவை. சில நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இதன் இறைச்சிக்கு இருப்பதாக தவறான தகவல்களை நம்பி, கருமந்திகளை வேட்டையாடுவதால், இவைகள் அழிந்து வரும் வன உயிரினமாக மாறி உள்ளது. எனவே, அரசு இவைகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு, அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வேட்டையாடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்,'என்றனர். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில்,'' கடந்த ஓராண்டில் இங்கு எவ்வித வேட்டை சம்பவங்களும் நடக்காதவாறு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுஎனினும் சிறப்பு ஆய்வு செய்து, கருமந்திகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோதிகள் குறித்து தகவல் வந்தால் மக்கள் உடனடியாக வனத்துறைக்கு புகார் அளிக்கலாம். வேட்டை தொடர்பாக யார் சிக்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை