கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டாலும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளனர்.தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இடுப்பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு மற்றும் தோட்டப்பராமரிப்பு செலவு உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்து வரும் விலை, போதுமானதாக இல்லை.இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக, டிச., மாதம் தொடங்கி தற்போது வரை, மழையுடன் தொடர்ந்து மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. உரமிட்டு பராமரித்து வரும் தோட்டங்களுக்கு, போதிய சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே, அரும்புகள் துளிர்விட்டு பசுந்தேயிலை மகசூல் அதிகரிக்கும். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.இந்நிலையில், டிச., மற்றும் ஜன., மாதங்களில் பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் பனி பொழிவான காலநிலை நிலவுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, மேகமூட்டமான காலநிலை தொடருகிறது. இதனால், கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து, மகசூல் முழுமையாக குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.