உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூன்று ஆண்டுகளாக நடக்கும் பாலம் பணி ஆமை வேகம்...! தாமதம் ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி

மூன்று ஆண்டுகளாக நடக்கும் பாலம் பணி ஆமை வேகம்...! தாமதம் ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி

கூடலுார் : முதுமலை தெப்பக்காடு - மசினகுடி சாலையில், மாயார் ஆற்றின் குறுக்கே, 2022ல் துவங்கப்பட்டு நடந்து வரும் புதிய பாலம் கட்டும் பணி தாமதமாவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி சாலையில் மாயார் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணி, 2022 ஜன., மாதம் துவங்கப்பட்டது. பழைய பாலம் உடைக்கப்பட்டும், சில காரணங்களால் புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்க தாமதமானது. ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நீலகிரி எம்.பி., ராஜா ஆகியோர், கடந்த ஆண்டு மார்ச், 7ம் தேதி பாலத்தை ஆய்வு செய்தனர். 'பாலம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும்,' என, அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து, பாலத்துக்கான துாண்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. நடப்பாண்டு துாண்கள் அமைக்கப்பட்டு, ஒரு பகுதியில் பாலம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து, மற்றொரு பகுதியிலும் பாலம் அமைப்பதற்காக 'சென்ட்ரிங்' அடித்து கம்பி கட்டும் பணிகள் நடந்தது. பருவமழை துவங்கியதால் 'சென்ட்ரிங்' பணிகள் நிறுத்தப்பட்டது.இதனால், போக்குவரத்துக்கு தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, பெய்து வரும் பருவ மழையில் மாயாற்றில் ஏற்படும் வெள்ளத்தில் தற்காலிக பாலம் மூழ்குவதால் அடிக்கடி போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பிரச்னைக்கு தீர்வாக, புதிய பாலம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெப்பக்காடு பாலத்தை ஆய்வு செய்த பின் கூறுகையில், ''தெப்பக்காடு பாலம் அமைக்க, சென்ட்ரிங் அடித்து கம்பி கட்டும் பணி நடக்கிறது. மழையின் போது பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் பணிகளை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் பாலம் பணிகளை முடித்து தருவதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த பாலத்தை திறந்து வைத்து அனைத்து வாகனங்களும் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் முடியும் வரை, உள்ளூர் மக்களும்; வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை