ஓட்டுக்கு காசு வாங்குவது ஜனநாயக தோல்வி: பெற்றோரிடம் சத்தியவாக்கு பெற அறிவுரை
குன்னூர்: - ஓட்டுக்கு காசு வாங்குவது ஜனநாயகத்தின் தோல்வி என்பதை எடுத்து கூறி, வாங்காமல் இருப்பதற்கு பெற்றோரிடம் குழந்தைகள் சத்திய வாக்கு பெற வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், லஞ்சம் இல்லாத நீலகிரி இயக்கம் சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சகிலா தலைமை வகித்தார். லஞ்சம் இல்லாத நீலகிரி இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசுகையில்,''புற்று நோயாக புரையோடி, நாட்டை செல்லரித்து கொண்டிருக்கும், லஞ்ச ஊழலை எதிர்க்காமல் மக்கள் கடந்து செல்லும் போக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. நாடு விடுதலையடைந்து, 75 ஆண்டுகள் கடந்தும், வல்லரசாகும் அளவுக்கு இயற்கை வளம், மனித வளம் இருந்தும், அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் லஞ்ச ஊழலில் திளைக்கின்றனர். ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்காளர்களையும் லஞ்சத்தின் பங்குதாரர்களாக மாற்றியது ஜனநாயகத்தின் மீதான பேரிடராக உள்ளது. ஓட்டுக்கு காசு வாங்குவது ஜனநாயகத்தின் தோல்வி என்பதை எடுத்து கூறி, வாங்காமல் இருப்பதற்கு பெற்றோரிடம் குழந்தைகள் சத்திய வாக்கு பெற வேண்டும்,'' என்றார். ஊழல் எதிர்ப்பு தொடர்பான கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.