உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுந்தேயிலை வரத்து அதிகரித்தும் உரிய விலை கிடைக்காமல் கவலை

பசுந்தேயிலை வரத்து அதிகரித்தும் உரிய விலை கிடைக்காமல் கவலை

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், பிரதான விவசாயமாக தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு தேயிலை தோட்டம் மட்டுமின்றி தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். அதில், சிறு விவசாயிகள் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில், பசுந்தேயிலை வினியோகம் செய்து வருகின்றனர். 'பசுந்தேயிலை கிலோவிற்கு கடந்த ஏப்., மாதம் 15 ரூபாய்; மே மாதம் 14 ரூபாய்; ஜூன் மாதம் 13.50 ரூபாய்,' என, விலை கிடைத்ததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், கடந்த செப்., அக்., மாதங்களில், 22 ரூபாய் என தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்தது. இதனால், விவசாயிகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, மழை, வெயில் என தேயிலை மகசூல் அதிகரிக்க ஏதுவான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதத்திற்கான விலை, 20.80 ரூபாயாக குறைந்து உள்ளது. தேயிலை வரத்து அதிகரித்தும், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்னாள் துணைத் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''இந்த பகுதி சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில், விலை உயர்வு விவசாயிகளை ஆறுதல் படுத்தியது. ஆனால், தற்போது திடீரென விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்பட்டு உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ