மைசூரு தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்
கூடலுார்; நீலகிரி மாவட்டம், முதுமலை- கார்குடி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை கார்குடி, கல்லல்லா பகுதியில் சேதமடைந்த பழைய பாலத்துக்கு மாற்றாக, 3.85 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டு பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. இந்நிலையில், முதுமலை கார்குடி பகுதியில் புதிய பாலத்தை ஒட்டி விரிசல் ஏற்பட்டு வருகிறது, அதில், தற்காலிகமாக ஜல்லி, பாறை பொடி கொட்டி சீரமைப்பு பணிகள் நடந்தும், விரிசலை தடுக்க முடியவில்லை. மேலும், அப்பகுதியில் நாள்தோறும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வரும் நிலையில், சாலையில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு தரமான சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. ஓட்டுனர்கள் கூறுகையில்,'மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரு பாலங்கள் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்பட்டது. ஓராண்டுக்குள் அங்கு சேதம் ஏற்பட்டு, அப்பகுதியை கனரக வாகனங்கள் கடக்கும் போது பெரும் அதிர்வு ஏற்படுகிறது. அங்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'அப்பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர்.