உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கேட்டு போராட்டம் நடத்த முடிவு! 25 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு இல்லாததால் அதிருப்தி

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கேட்டு போராட்டம் நடத்த முடிவு! 25 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு இல்லாததால் அதிருப்தி

ஊட்டி; நீலகிரியில் கடந்த, 25 ஆண்டுகளாக தேயிலை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், 17ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 40 ரூபாய் வழங்கக்கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனினும், மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேயிலைக்கு விலை கிடைக்காததால் நஷ்டம் அடைந்த பல விவசாயிகள், வேலை வாய்ப்புகளை தேடி வெளி மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தேயிலை தோட்டங்கள் 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்ளுக்கு விற்கப்பட்டு, கட்டட காடுகளாக மாறும்சூழல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கைகள் என்ன?

தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட கலெக்டர் தலைமையில் விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், தேயிலை வாரிய செயல் இயக்குனர், விவசாய சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். விலை நிர்ணய கமிட்டி சார்பில், குன்னுார் தேயிலை வாரியம் மாதந்தோறும் அறிவிக்கும் தேயிலைக்கான விலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் வழங்க வேண்டும். ஆனால், சில தொழிற்சாலைகள் முறையாக விலை வழங்காத காரணத்தால், சிறுவிவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த அக்., மாதத்தில் தேயிலை கிலோவுக்கு, 24.50 பைசா அறிவிக்கப்பட்டது. ஆனால்,பல கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கிலோவுக்கு, 21 ரூபாய் நிர்ணயம் செய்து உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த மாதத்திற்கான, 1.60 கோடி ரூபாய் நிலுவை தொகை தற்போது வரை வழங்கவில்லை. இது போன்று விவசாயிகளை ஏமாற்றும் செயல்கள் தொடர்கின்றன.

தீர்வு காண ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், தேயிலை பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆரி கவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை மோகன் தலைமையில், இரு மாதத்துக்கு முன்பு, அ.தி.மு.க.,-பா.ஜ.,-நா.த.க., -வி.சி.க., -சி.பி.எம்., -சி.பி.ஐ.,-தே.மு.தி.க.,-த.வெ.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில், நீலகிரி விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து, கோரிக்கைகள் அடங்கிய மனு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் , தேயிலை வாரியம் அதிகாரிகள் தலைமையில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து, மீண்டும் மாவட்ட தழுவிய போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

நடத்த முடிவு

ஆரிகவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை மோகன் கூறுகையில், ''65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பசுந்தேயிலை குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரும், சிறு விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்காடு கிராமத்தில் நடந்தது. அதில், கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம், 17ம் தேதி, ஊட்டியில் ஏ.டி.சி., திடலில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதில், விவசாயிகள், வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள உள்ளனர். தீர்வு கிடைக்கவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி