மருத்துவமனை கட்டுமான பணியில் தொய்வு
பந்தலுார்; பந்தலுார் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டட கட்டுமான பணி தொய்வடைந்து உள்ளது.பந்தலுார் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நோயாளிகள் மட்டும் இன்றி, உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கும் படுக்கை வசதிகள் உள்ளது. ஆனால், சிகிச்சை அளிக்க ஏதுவாக போதுமான டாக்டர்கள் மற்றும் உபகரணங்கள், வசதிகள் இல்லாத நிலையில் பெயரளவிற்கு தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்ட போது இருந்த, 'எக்ஸ்-ரே, ஆப்ரேஷன் தியேட்டர் போன்றவை தற்போது செயலிழந்து உள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட சிறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகள், ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வந்து உட்கொள்ளும் நிலை உள்ளது. இந்நிலையில், மருத்துவமனைக்கு கூடுதலாக கட்டடங்கள் கட்டும் வகையில், இதன் வளாகத்தில் இருந்த ஊழியர்கள் குடியிருப்பு அனைத்தும் அடியோடு இடித்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஊழியர்கள் வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இடிக்கப்பட்ட கட்டடங்கள் கடந்த பல மாதங்களாகஅதே பகுதியில் அப்படியே விடப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மருத்துவமனை கட்டடத்தில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், கூடுதலாக கட்டடம் கட்டுவதாக கூறி டாக்டர்கள், ஊழியர்கள் குடியிருந்த குடியிருப்புகளையும் இடித்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'தாலுகா தலைமை மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள்; கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.