ஊட்டி : நீலகிரியில் தொடரும் மழையால் அணைகள் நிரம்பியுள்ளன. பைக்காரா அணை
முழு கொள்ளளவை எட்டியதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அணைகள்
முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சில அணைகளில், நீர் மட்டம் அபாய கட்டத்தை
தாண்டியுள்ளதால், நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பைக்காரா அணை முழு
கொள்அளவை எட்டியதால் அணையிலிருந்து தண்ணீரை மின் வாரியத்தினர் வெளியேற்றி
வருகின்றனர். பைக்காரா அணை, பைக்காரா ஆற்றுப்படுகை மற்றும் தாழ்வான
பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து
வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அவலாஞ்சியில் அதிகப்பட்சமாக 100 மி.மீ.,
மழை பதிவாகியிருந்தது. அப்பர்பவானியில் 90 மி.மீ., எமலரால்டில் 45 மி.மீ.,
தேவாலாவில் 36 மி.மீ., நடுவட்டத்தில் 28.5 மி.மீ., கூடலூரில் 17 மி.மீ.,
கிளன்மார்கனில் 12 மி.மீ., கேத்தியில் 8 மி.மீ., ஊட்டியில் 6.2 மி.மீ.,
குந்தாவில் 6 மி.மீ., கெத்தையில் 4.5 மி.மீ., குன்னூரில் 2.8 மி.மீ.,
கல்லட்டியில் 2.4 மி.மீ., கோத்தகிரி, கோடநாடு மற்றும் பர்லியாற்றில் 2
மி.மீ., மற்றும் கிண்ணக்கொரையில் 1 மி.மீ., மழை பதிவாகியது. மழையின்
காரணமாக கூடலூர் கீழ் நாடுகாணி பகுதியில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு,
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் என்ற பகுதியில் சாலையில் பிளவு
ஏற்பட்டுள்ளது. கனமழையில்வீடுகள் சேதம்: பந்தலூர் தேவாலா பகுதியில்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மண்
சரிந்துள்ளது. நெல்லியாளம் பகுதியில் நேற்று அதிகாலை மாரியம்மாள் என்பவரின்
வீடு இடிந்து விழுந்தது. மழையினால் பந்தலூர் அருகே பொன்னானி, புளியாடி
பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து
வருவதால் வாகனங்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். நிவாரண
பணிகளை மேற்கொள்ள பந்தலூர் தாசில்தார் பாபு தலைமையில் வருவாய் துறையினர்
24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எருமாடு அருகே
ஆண்டன்சிரா பகுதியில் செல்விமுருகன், இண்ட்கோ நகரில் ஜூலியட், கப்பாலாவில்
ஆதிவாசி செல்வன் ஆகியோரின் வீடுகளின் சுவர்கள் இடிந்தன. மழை தொடர்ந்து
பெய்து வருவதால் பந்தலூர் பகுதியில் மட்டும் 7 வீடுகள் இடிந்து
நாசமாகியுள்ளன.