வனத்தில் அத்துமீறி ட்ரோன், கேமரா பயன்படுத்த கூடாது; விடுமுறை நாட்களில் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை
ஊட்டி: 'நீலகிரியில், இயற்கை அழகை ரசிக்கும் நோக்கில் 'ட்ரோன், கேமரா' போன்றவற்றை அனுமதி இன்றி வனத்திற்குள் சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம், 60 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இங்கு பல்லுயிர் பெருக்கம் மற்றும் வன விலங்குகளுக்கான முக்கிய இடமாக விளங்குகிறது. நீலகிரி உயிர்கோள காப்பகமாக திகழ்கிறது. இங்கு பசுமையான இலையுதிர் காடுகள் மற்றும் சோலை காடுகள் போன்ற பல வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. தவிர, 3,300 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவர இனங்கள் உள்ளன. முதுமலை தேசிய பூங்கா, முக்கூர்த்தி தேசிய பூங்கா போன்ற பல தேசிய பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. யானை, புலி, கரடி, நீலகிரி வரையாடு போன்ற பல விலங்குகள் வாழ்கின்றன. அத்து மீறினால் நடவடிக்கை இந்நிலையில், சமீப காலமாக இயற்கை அழகை ரசிக்கும் நோக்கில், சில சுற்றுலா பயணியர் வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர். இவர்களை தவிர, சுற்றுலா பயணியர் போர்வையில் சமூக விரோதிகள் வனத்தில் நுழைந்து காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவது, ட்ரோன், கேமரா போன்றவற்றை அனுமதியின்றி வனத்திற்குள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. தவிர, கேரளா, கர்நாடகா மாநிலத்திலிருந்து, சமூக விரோத கும்பல்கள் இங்கு முகாமிட்டு, வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை பிற மாநிலங்களில் விற்று வருவது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, சமூக விரோத செயல்களை வனத்துறையினர் தடுக்கும் விதமாகவும், வன சூழலை பாதுகாக்கவும், தமிழ்நாடு வன சட்டபடி, மஞ்சூர், குந்தா, கெத்தை, எமரால்டு, ஊட்டி, தலைகுந்தா சுற்றுப்புற பகுதிகளில் அத்துமீறி செல்லும் சமூக விரோத கும்பல், சுற்றுலா பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறை நாட்களிலும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''நீலகிரி வனப்பகுதி, வன விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. வன சட்டத்திற்கு மீறி வனத்தில் அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தலைகுந்தா பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் காப்பு காடுகளுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.