உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானை; நீண்ட நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானை; நீண்ட நேரம் போராடி மீட்ட வனத்துறையினர்

குன்னுார்; குன்னுாரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டு யானை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னுார் பர்லியார் மலை பாதையில், கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில், தண்ணீர் தொட்டியில் காட்டு யானை விழுந்து தவிப்பதாக, நேற்று அதிகாலை, 3:20 மணியளவில் வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனத்துறையினர் அங்கு சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொட்டியின் கற்களை உடைத்து, நீண்ட நேரம் போராடி வெளியே யானை வரும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து காலை, 7:40 மணிக்கு தொட்டியை விட்டு வெளியேறிய காட்டு யானை, சில விநாடிகள் வனத்துறையினரை பார்த்து வண்ணம் நின்று, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறையினர் கூறுகையில், 'குட்டியுடன் உலா வந்த இந்தப் பெண் யானை தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு பொக்லைன் செல்ல முடியாத நிலையில், வன ஊழியர்கள் தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து, யானை வெளியே வரும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்ததால் அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை