நீலகிரி வனப்பகுதியில் அதிகரித்துள்ள அன்னிய தாவரங்களை அழிப்பது சவால்
ஊட்டி; ''நீலகிரியில் வனப்பகுதியில், 25 ஆயிரம் எக்டர் பரப்பில் அன்னிய தாவரங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது; இதனை அழித்து, புல்வெளிகள்;சோலை காடுகளை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம்,'' என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டல பாதுகாப்பு குறித்த மாநாட்டில், நீலகிரி கோட்ட வன அலுவலர் கவுதம் பேசியதாவது: நீலகிரியில், மனித--விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. இது போன்ற சமயங்களில் வனத்துறையினர் தீயில் நடப்பது போன்று உணர்கிறோம். வனவிலங்கு இடப்பெயர்ச்சி என்பது சாத்தியமற்ற தீர்வாக காணப்படுகிறது. முதுமலையில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டெருமைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. வனவிலங்கு வேட்டைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் புலி உள்ளிட்ட வன விலங்குகளின் படங்கள்; வீடியோ ஆகியவை இடத்தின் பெயருடன் பதிவு செய்வதால், வேட்டைகாரர்கள் அந்த இடங்களை தேடி வருகின்றனர். நீலகிரியில், 2023ல் புலி வேட்டையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள வேட்டைக்காரர்களை தேடி வருகிறோம். நீலகிரியில் வனப்பகுதியில், 25 ஆயிரம் எக்டர் பரப்பில் அன்னிய தாவரங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனை அழித்து, புல்வெளிகள் மற்றும் சோலை காடுகள்; சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.