ஒரே மாதிரியான பயிர் வகைகளை தவிர்த்து விவசாயிகள் சுழற்சி முறை சாகுபடிக்கு அறிவுரை!
ஊட்டி: ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகளை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம், 25 ஆயிரம் ஏக்கரில் கார் போகம், கடை போகம், நீர் போகம் என, மூன்று பருவங்களில் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், வெள்ளை பூண்டு உள்ளிட்ட பயிர்களுக்கு பிற இடங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால் விவசாயிகள் மேற்கண்ட பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்கின்றனர். இதுவும் ஒரு காரணம் இயற்கை மற்றும் பயறு அடிப்படையிலான வேளாண்மை முறைகளின் கீழ் பயிர் மேலாண்மை நுட்பங்கள், மண் பாதுகாப்பு முறைகள் மற்றும் இடுபொருட்கள் உபயோகத்தின் சீர்மிகு நடைமுறைகளை விவசாயிகள் சரிவர கடைப்பிடிக்காமல் இருப்பதும், காலநிலை மாற்றம், விளைநிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகள் சாகுபடி, மண் வளத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளால் பாதிப்பு ஏற்பட்டு கூடுதல் மகசூல் பெற முடியாமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தவிர்க்க, பயிர்களுக்கான சுழற்சி முறை என்பது, ஒரே நிலத்தில் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிட வேண்டும். இந்த முறையின் முக்கிய நோக்கம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை மீட்டெடுப்பது, பூச்சிகள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவது, மற்றும் ஒட்டுமொத்த மகசூலை அதிகரிப்பதாகும். ஒரே பயிரைத் தொடர்ந்து பயிரிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இது உதவுகிறது. இது குறித்து தோட்டக்கலை, வேளாண் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகள் ஒன்றிணைந்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மையத்தின் தலைவர் சோமசுந்தரம் ஜெயராமன் கூறியதாவது, 'காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை எதிர் கொள்ள, மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலைப்பகுதிகளில் நிலையான வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும். ரசாயன உரங்களால் மண்வள பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இயற்கை வேளாண்மையை ஏற்றுக்கொள்வது மண்ணின் வளம் மற்றும் நீண்டகால உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் முக்கியமானது. இயற்கை விவசாய நிலங்களில் வழக்கமான விவசாய நிலங்களை விட அதிக பல்லுயிர் பெருக்கம் காணப்படுகிறது. பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம். விவசாயிகள் விளைநிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகளை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.'' என்றார்.