உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதாரவிலை கிலோ ரூ. 40! மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு காத்திருக்கும் நிலை

விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதாரவிலை கிலோ ரூ. 40! மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு காத்திருக்கும் நிலை

குன்னூர்: நீலகிரியின் தேயிலை தூள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து சராசரி விலை உயர்ந்த போதும், பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 40 ரூபாய் வழங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளில் நடவடிக்கைக்கு சிறு விவசாயிகள் காத்திருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், லட்சக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் ஏல மையம் மற்றும் டீசர்வ் மையம், கோவை ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலங்களின் அடிப்படையில், அந்தந்த மாதத்திற்கான, பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைகளில் செய்யப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக, அவ்வப்போது பெய்யும் மழையும், வெயிலும் பசுந்தேயிலை மகசூலுக்கு ஏற்ற காலநிலையாக இருந்ததால், தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை அதிகளவில் கொள்முதல் செய்ததுடன், உற்பத்தியும் அதிகரித்தது. விற்பனையில் ஏற்றம் கடந்த வாரம் நடந்த 43வது ஏலத்தில், 19.38 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்ததில், 17.54 லட்சம் கிலோ விற்பனை ஆனது. 42வது ஏலத்தில், 17.16 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 15.04 லட்சம் கிலோ விற்பனை இருந்தது. 2.22 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது; விற்பனையிலும் ஏற்றம் கண்டு ஒரே வாரத்தில் 2.50 லட்சம் கூடுதலாக விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, ரூ.99.78 என இருந்தது. கடந்த பிப்., மாதம் முதல் ஜூன் மாதம் வரை சராசரி விலை ரூ.100 க்கு மேல் இருந்தது. தொடர்ந்துசரிவை சந்தித்த நிலையில், கடந்த மாதம் ஏற்றம் காண துவங்கியது. இதேபோல, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி, விற்பனை அதிகரித்தது. விலை இல்லை தேயிலை தூள் உற்பத்தி, விற்பனை உயர்ந்து சராசரி விலையும் சற்று ஏற்றம் கண்ட போதும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. 2022ல் தோட்டக்கலை நடத்திய ஆய்வில், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான உற்பத்தி செலவு ரூ.22.30 என கணக்கிடப்பட்டது. தற்போது 25 ரூபாய் வரை உற்பத்தி செலவாகும் நிலையில், கடந்த மாதம் பசுந்தேயிலை கிலோ 15 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்தது. நீலகிரி சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், 'சிறு தேயிலை விவசாயிகளுக்கு, பசுந்தயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மத்திய இணை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை விவசாயிகள் நேரில் சந்தித்து தீர்வு காண கோரி முறையிட்டும் பலனில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறு தொகையை மானியமாக வழங்கி, விவசாயிகளின் கவனத்தை திருப்பி, இம்முறை விவசாயிகளின் ஓட்டுக்களை பெற்று விடலாம் என எண்ணியிருக்கலாம். ஆனால் வரும் தேர்தலில் விவசாயிகள் மீண்டும் ஏமாற மாட்டார்கள். கடந்த தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பசுந்தேயிலைக்கு இன்றைய நிலையில், குறைந்தபட்ச விலை கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் நிர்ணயம் செய்யும் கடமை, பொறுப்பு மத்திய, மாநில அரசுக்கு உள்ளது. தமிழக அரசின் இன்கோ சர்வ் கீழ் இயங்கும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் நிர்வாகத்தை சீர்படுத்தி சிறு தேயிலை விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ