கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், அனுமதி இல்லாமல் பட்டா மற்றும் வருவாய் நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்துவது தொடர்கிறது.நீலகிரி மாவட்டத்தில், பட்டா மற்றும் வருவாய் நிலங்களில் சில்வர் ஓக் மரங்கள் வெட்ட, வனத்துறை மற்றும் வருவாய் துறையிடம் இருந்து அனுமதி பெறவேண்டும். உரிய அனுமதி பெறாமல், விவசாயிகளிடம் இருந்து, அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் சில்வர் ஓக் மரங்கள், அதிக விலைக்கு மில்களில் விற்கப்படுகிறது.கோத்தகிரி குறிப்பாக, கட்டபெட்டு வனச்சரகத்தை பொருத்தமட்டில், இரவும் பகலுமாக, ஒரு நாளுக்கு, 20க்கும் மேற்பட்ட லாரிகளில், வெட்டப்பட்ட மரங்கள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் சாமில்களில் விற்பனை செய்யப்படுகிறது.அதில், சில இடங்களில் பட்டியல் இன மரங்களும் அடங்கும். இப்பகுதியில்அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டப்படுவது குறித்து, வருவாய் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது விவசாயிகள் மத்தியல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக, சூழல் ஆர்வலர்கள், வனத்துறை மற்றும் வருவாய்துறை அமைச்சகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.மலை மாவட்டம் சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''பசுந்தேலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் நிழலுக்காகவும், விறகிற்காகவும் வளர்க்கும் சில்வர் ஓக் மரங்களை விற்பனை செய்கின்றனர். பல அரசு துறையினருக்கு 'கவனிப்பு' போக, மீதம் உள்ள, 50 சதவீதம் தொகை, வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பகிரப்படுகிறது. அதில் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகள்,கண்காணிப்பது அவசியம். இப்பிரச்னைக்கு தீர்வு காண, குறைந்த பட்சம், ஆறு மாதத்திற்கு மரம் வெட்டுவதற்கு தடை விதித்து ஆய்வு செய்ய வேண்டும்,''என்றார்.