-நமது நிருபர்- தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல், வனத்துறையினர் திணறுவதாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம், குன்னுாரை அடுத்த, பந்துமி, 'பாரஸ்ட் டேல்' பகுதியில், மூன்று நாட்களாக பற்றி எரிந்த வனத்தீயால், 10 ஏக்கரில் மரங்கள், செடிகள், அரிய வகை மூலிகைகள் அழிந்தன. வனப்பகுதிக்குள் வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் முடியாத சூழ்நிலையில், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், தன்னார்வலர்கள் என, 70க்கும் மேற்பட்டோர் தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும், கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால், வனத்துறையினர் திணறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், 'பாரஸ்ட் டேல் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிலர் சருகுகளை எரித்த போது தீ வனத்தில் பரவியது' என்பது தெரிந்தது.இதுதொடர்பாக, தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீல பாண்டியன், 64, சோலடா மட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் கருப்பையா, 63, மோகன், 35, ஜெயகுமார், 60, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மாவட்ட கலெக்டர் அருணா, ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீயை அணைக்க, கோவை சூலுார் விமான நிலைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதேபோல, கொடைக்கானலிலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. காட்டுத்தீ ஏற்படுவது, வனப்பகுதிக்கு மட்டுமல்லாது, பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: பொதுவாக இலையுதிர் காலத்தில் தான், காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதனால், டிசம்பர் இறுதியில் துவங்கி காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை முடுக்கி விடுகிறது. முதுமலை உள்ளிட்ட காப்பகங்களில், காட்டுத்தீ தடுப்புக்காக சாலையை ஒட்டிய புதர்கள் அழிக்கப்படுகின்றன. மரத்தில் இருந்து உதிர்ந்த சருகுகள் குவியலாக இருக்கும் இடங்களில், தீ வேகமாக பரவுகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களில் வனப்பகுதிகளில் இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மரத்தில் இருந்து உதிர்ந்த சருகுகள், தேவையில்லாாத புதர்களை அவர்களே எரித்து அப்புறப்படுத்துகின்றனர். இதனால், காட்டுத்தீ பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற புதிய வழிமுறைகளை பின்பற்ற தமிழக வனத்துறை அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
யானையை விரட்ட தீ
கேரள மாநிலம் மூணாறு அருகே கன்னிமலை, நயமக்காடு ஆகிய பகுதிகளில், ஐந்து காட்டு யானைகள் ஒரு மாதமாக சுற்றி திரிகின்றன. அவற்றை விரட்டும் நோக்கில் மர்ம கும்பல் காட்டிற்கு தீ வைத்ததில், மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து சாம்பலாயின. அதற்கு முன், யானைகள் வேறு பகுதிக்கு சென்று விட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.