மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்
ஊட்டி: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. அடுத்தாண்டு நடைபெற உள்ள, 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கை திறந்து வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின், கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''வரும், 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக, ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது,'' என்றார். தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.