மரம் வெட்டி கடத்தல்; வனத்துறையினர் வழக்கு பதிவு-
பந்தலுார்; பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டி கட்டத்தப்பட்டது குறித்து, வனத்துறையினர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் மரங்கள், வெட்ட வேண்டுமெனில், 'மாவட்ட மரங்கள் பாதுகாப்பு குழுவிடம்' முறையான அனுமதி பெற வேண்டும். சமீப காலமாக, கூடலுார், பந்தலுார் தாலுகாவில், 'ஆபத்தான மரங்கள்' என்ற பெயரில், அனுமதி பெற்று, விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்தி வருவது அதிகரித்து உள்ளது. இந்நிலையில், பிதர்காடு பஜார், சந்தக்குன்னு, பந்தத்காப்பு பகுதிகளில் தனியார் நிலங்களில், எந்த விதமான அனுமதியும் பெறாமல் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. சில்வர் ஓக், பலா, மா உள்ளிட்ட மரங்களுக்கு இடையே, விலை உயர்ந்த மரங்களும் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஆளும் கட்சி; எதிர்கட்சியை சேர்ந்த இருவர் இணைந்து ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் தற்போது மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது குறித்து, மாவட்ட வன அலுவலர் நேரில் ஆய்வு செய்து, நில உரிமையாளர் மீது மட்டுமின்றி கடத்தலில் ஈடுபட்டுள்ள அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, அழிந்து வரும் மரங்களை காப்பாற்ற வேண்டும்,' என்றனர். வனச்சரகர் ரவி கூறுகையில், ''யானை கண்காணிப்பு பணிக்காக வனக் குழுவினர், பல்வேறு இடங்களுக்கும் சென்று விடும் சூழலில், மரக்கடத்தல் கும்பல் அனுமதியில்லாமல் மரத்தை வெட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது, வெட்டப்பட்டுள்ள மரங்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக பந்தக்காப்பு பகுதியில் நில உரிமையாளர் சபரீசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இப்பகுதியில் மரக்கடத்தலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.