வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு வந்தே பாரத் உடலாமே.
குன்னுார்:'மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினந்தோறும் சிறப்பு மலை ரயில் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி-மேட்டுப்பாளையம்; குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் கோடை சீசன் காலங்களில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது, 'ஜூலை, 1ம் தேதி வரை, வார இறுதி நாளான வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, 4 நாட்களுக்கு மட்டும், மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே, நான்கு 'டிரிப்' மட்டுமே சிறப்பு மலைரயில் இயக்கப்படுகிறது.அதில், மூன்று பெட்டிகள் மட்டுமே இயக்கப்பட்டாலும் அனைத்தும் முன்பதிவு ஆகிவிடுகிறது. ஏற்கனவே, காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலைரயில், இரண்டு மாதங்களுக்கு முழுமையாக முன்பதிவாகி தினமும் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில் அவசியம்
'தற்போது,கோடை சீசன் நிலவி வருவது காரணமாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், தினம் தோறும் சிறப்பு மலை ரயில் இயக்க வேண்டும்,' என, உள்ளூர் மக்களும்; சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 6 பெட்டிகள் கொண்ட மலை ரயில் பல முறை இயக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடை சீசனில் மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே நாள்தோறும் இரு 'டிரிப்' சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிறப்பு ரயில் வாரத்தில், 4 நாட்களுக்கு நான்கு 'டிரிப்' மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் பெட்டிகள் இணைக்கலாம்.நீலகிரிக்கு வரும் வாகனங்கள் அதிகரிப்பதால் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. இந்நேரத்தில் தினந்தோறும் சிறப்பு மலை ரயில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.சேலம் கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி, மரிய மைக்கேல் கூறுகையில்,'' சிறப்பு ரயில் இயக்குவது தொடர்பான பயணிகளின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,''என்றார்.
ஒரு வந்தே பாரத் உடலாமே.