உண்ணி செடிகளை அரைத்து எரிபொருள் தயாரிப்பு: ரூ. 18 லட்சத்தில் டிரையர் மெஷின்
ஊட்டி: -ஊட்டி மசினகுடி பகுதியில், உண்ணி செடிகளை அரைத்து, பிரிகட்டிங் கட்டிகளாக தயாரிக்கும் முறைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி, சிங்காரா வன சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டில், 30 ஏக்கர் பரப்பளவில் உண்ணி செடிகளை வெட்டி, 9 பழங்குடியின பணியாளர்கள் டிராக்டர் ஷட்டர் எந்திரம் வாயிலாக, அரைத்து காய வைத்து பல் வேரிசன், மாய்ஸ்ரைசில் தூளாக்கி, பிரிகட்டிங் எந்திரம் வாயிலாக கட்டிகளாக தயாரித்து வருகின்றனர். அதனை, கூடலூர் சாலிஸ்பரி தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, 9 டன் பிரிகட்டிங் கட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா இப்பணியை ஆய்வு செய்தார். மேலும், மழைக் காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், பிரிகட்டிங் கட்டிகள் தயாரிக்க, ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 10 லட்சம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவின் வாயிலாக, 8 லட்சம் என, மொத்தம், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் டிரையர் மிஷின் வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 70 சதவீதம் மானியத்திலும், 30 சதவீதம் வனத்துறை நிதியில் இருந்து, சிமெண்ட் தளம் இப்பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக, சிங்கார காப்பு காட்டல் உண்ணி செடி எந்திரத்தில் அரைக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், ஆதிதிராவிட நல தாசில்தார் கலைச்செல்வி, வனச்சரகர் தனபாலன், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.