ஆக்கிரமிக்கப்பட்ட அரசு பள்ளி நிலம் மீட்பதில் அரசு அதிகாரிகள் மவுனம்
பந்தலுார்:பந்தலுார் அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசு நிலத்தை மீட்பதில் அதிகாரிகள் மவுனம் காத்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பந்தலுார் அருகே, எருமாடு மராடி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு, 3.5 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், அதனை பலரும் கையகப்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.இந்நிலையில், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பள்ளி வளாகத்தை சுற்றிலும், பாதுகாப்பு சுவர் கட்டும் பணி கடந்த ஆண்டு நவ., மாதம் துவங்கியது. ஆக்கிரமிப்பில் பள்ளி நிலம்
அப்போது, 'பள்ளிக்குரிய நிலத்தை 'சர்வே' செய்யாமல் பாதுகாப்பு சுவர் கட்ட கூடாது,' என, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, டிச., மாதம் பந்தலுார் தாசில்தார் முன்னிலையில், நில அளவை செய்யப்பட்ட போது, பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.ஆனால், நிலத்தை கையகப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் வருவாய் துறை மற்றும் கூடலுார் ஊராட்சி ஒன்றிய துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்ட, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளை, போலீசார் சமாதானப்படுத்தி, 'ஜன., 30 ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு நிலம் கையகப்படுத்தப்படும்,' என, தெரிவித்தனர். போராட்டம் நடத்த முடிவு
ஆனால், அதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நில அளவையர்கள், 'ஏற்கனவே நில அளவை செய்யப்பட்டது பெயர் அளவுக்கு தான்; முறையாக நில அளவை செய்யப்படவில்லை,' என, கூறியதாக பெற்றோர் குற்றச்சாட்டினர்.தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம், மாவட்ட கலெக்டர் மற்றும் கூடலுார் ஆர்.டி.ஓ., உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து இது குறித்து புகார் கூறியும், அதிகாரிகள் 'மவுனம்' காத்து வருகின்றனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில்,' இங்குள்ள அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தாரை வார்க்கவே மவுனம் காத்து வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து, பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.