ஊட்டி;ஊட்டி ஊராட்சி ஒன்றியம் தொறையட்டி கிராமத்தில் நடந்த துானேரி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கலெக்டர் அருணா பேசுகையில், ''துானேரி ஊராட்சியில், இரண்டு ஆண்டுகளில், 3.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 70 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை, 1.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 47 பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, மகளிர் திட்டம் சார்பில், 5 மகளிர் சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்க, சமுதாய முதலீடு நிதியின் கீழ், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை; மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு, தலா, 1,000 ரூபாய் மதிப்பில் மருத்துவ பெட்டகம்; 5 கர்ப்பிணி பெண்களுக்கு தலா, 2,000 ரூபாய் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் 5 தூய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கப்பட்டது.மேலும், தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.அதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவுசிக், மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.