அடாது மழை... விடாது மண் ஆணி! கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு தடுப்பு; மூன்று இடங்களில் கைகொடுத்த திட்டம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, மண் ஆணி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெய்த மழையில் நிலச்சரிவு பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது என மாநில நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு குஞ்சப்பனை வழியாக செல்லும் சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைவு, கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு, ஊட்டி செல்லலாம் என அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் பயணிக்கின்றனர். இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில், வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே 3 இடங்களில் நலச்சரிவு ஏற்பட்டது.பாறைகள் உருண்டு, மண் சரிந்து சாலையில் விழுந்தது. இந்த நிலச்சரிவு தொடர்பாகவும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கவும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வல்லுநர் குழு வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் பரிந்துரை படி தற்போது நிலச்சரிவை தடுக்க ரூ.4 கோடியில் மண் ஆணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-மண் ஆணி அமைத்தல் என்பது, மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோ சீடிங்' முறையில், புல் வளர்க்கப்படுகிறது. 'ஹைட்ரோ சீடிங்' என்பது புல் விதை, உரம் உள்ளிட்டவற்றை நீரில் கலந்து உருவாக்கும் விதைக் கலவையை, உயர் அழுத்த குழாய் வழியாக, செங்குத்தான மலைப் பகுதிகளில் செலுத்துவது ஆகும். 'ஜியோ கிரிட்' எனப்படும், பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட இரும்பு பாய்கள் மேல் பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படும். இது மண் சரிவை தடுக்கிறது. மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு, பாறைகள் உருண்டு சாலையில் விழும் பகுதிகள் என 3 இடங்கள் கண்டறியப்பட்டன. இந்த இடங்களில், மண் ஆணி அமைத்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ரூ.4 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. தற்போது இத்திட்டத்தில் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 30 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்தது. ஏற்கனவே நிலச்சரிவான இடத்தில் மண் ஆணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டது. மண் ஆணி திட்டம் கைகொடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.---