உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் நிதியில் விடுதி சீரமைப்பு; பயணிகளுக்கு பயனில்லாத அரசு திட்டம்

பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் நிதியில் விடுதி சீரமைப்பு; பயணிகளுக்கு பயனில்லாத அரசு திட்டம்

குன்னுார் ; குன்னுார் பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணிக்கான நிதியில், அங்குள்ள விடுதியை மேம்படுத்தி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்டில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி மேற்கொள்ள, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கடந்த பிப்., மாதம் முதல் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிதியில் ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் 'சீல்' வைத்த விடுதி அறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில் கூரை அமைப்பதற்காக சாலையிலேயே இரும்பு கம்பிகள் அடிக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக பயன்படாத இந்த நிதி, 'நகராட்சிக்கு வருமானம் கிடைக்கவும், அரசியல்வாதிகள் விடுதி நடத்தி பணம் பார்க்கவும், சீரமைக்கப்பட்டு வருகிறது,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமீபத்தில் இங்கு ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற குழுவினர் இருக்கைகள் அமைக்க கூறியதால், வேறு இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓரிரு இருக்கைகளை கொண்டு வந்து இங்கு வைத்து, 'போட்டோ' எடுத்து அனுப்பி குழுவினரை நம்ப வைத்துள்ளனர்.தற்போது, அந்த இருக்கைகளும் உடைந்து பயணிகள் அமர முடியால் சேதமடைந்துள்ளன. பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருக்கும் குழந்தைகளுடன் வரும் மகளிர், முதியவர்கள் உட்பட பயணிகள் நீண்ட நேரம் நின்று மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

பயணிகள் பாதிப்பு

லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''மாநிலத்திலேயே போதியை இருக்கைகள் இல்லாத ஒரே பஸ் ஸ்டாண்ட் என்ற அவலமான நிலை இங்கு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இலவச கழிப்பிடம் ஏற்பாடு செய்யப்படும் என கூறிய சட்டமன்ற குழுவின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது. இங்கு பயணிகளின் வசதிக்கு மேற்கொள்ள வேண்டிய நிதியை, நகராட்சி வருமானம் பார்க்கும் பணிகளுக்கு உட்படுத்தி, அரசியல்வாதிகள் விடுதியை எடுத்து நடத்த வழி வகுத்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் செல்லும் பகுதியில் தாழ்வாகவே இரும்பு கம்பிகள் பொருத்தி அழகு படுத்தாமல் அலங்கோலப்படுத்தி விபத்துக்கு வழிவகுத்து வருகிறது.பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் நலனுக்கு அரசு திட்டம் செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.குன்னுார் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,''தற்போது புதிதாக சேர்ந்துள்ளதால், வரும் திங்கள் கிழமை ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை