பந்தலுாரில் மாற்றம் பெற்ற உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
பந்தலுார் : பந்தலுாரில் பராமரிப்பில்லாமல் இருந்த உள்விளையாட்டு அரங்கம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.பந்தலுார் பேட்மிண்டன் விளையாட்டு குழு சார்பில், அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம் பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது.இதனை பார்வையிட்ட ஊட்டி பேட்மிண்டன் விளையாட்டு குழு; தமிழ்நாடு பேட்மிண்டன் குழுவினர், 'ஷெஜிமூவ் ஷெட்டில்ஸ்' குழுவினர் இணைந்து புனரமைக்க முடிவு செய்தனர்.அதில், தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேசன் சார்பில், 3 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 'சிந்தடிக்' ஆடுகளம் அமைக்கப்பட்டது.அரங்கத்தை சீரமைக்க மற்ற இரு விளையாட்டு குழுவினரும் இணைந்து, 90 ஆயிரம் ரூபாய் வழங்கினர். பந்தலுார் பேட்மிண்டன் விளையாட்டு குழு, 70 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது, விளையாடுவதற்கு ஏற்ற வகையில் நவீன விளையாட்டு அரங்கம் தயாராகி உள்ள நிலையில், அதனை ஒப்படைக்கும் விழா நடந்தது. பொருளாளர் சத்தியசீலன் வரவேற்றார். தலைவர் தாஸ் தலைமை வகித்தார்.ஊட்டி குழுவின் துணை தலைவர் சதீஷ் பேசுகையில், ''வளர்ச்சி அடைந்த நகர பகுதிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கிராமப்புறங்களில் உள்ளடக்கிய பந்தலுார் பகுதியில் இருந்து, திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர். இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது,'' என்றார். இந்த பணிக்கு உதவிய பலர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சமுத்திரபாண்டியன் நன்றி கூறினார்.