சாலையில் தாறுமாறாக நிறுத்தும்: வாகனங்களால் சிரமம்
ஊட்டி;கமர்சியல் சாலையில் அதிகளவில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.ஊட்டி நகருக்கு அத்தியாவசிய தேவைக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொது மக்களின் வசதிக்கேற்ப கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மேலும், நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் வாகனங்களால் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.நோ--பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தாலும் வேறு வழி இன்றி வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக, ஊட்டி கமர்சியல் சாலையில் பொது மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு, 100 மீ., துாரத்திற்கு எப்போதும் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியை போலீசார் ஆய்வு செய்து குறிப்பிட்ட அளவில் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்கள் இடையூறின்றி நடந்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.