சாலையோரம் மண் சரிவு; உடனே அகற்ற என்ன தடை?
கூடலுார்; கூடலுார் பகுதியில் மழையின் போது, சாலையோரங்களில் ஏற்படும் மண் சரிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கூடலுார் பகுதியில் மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் சாலையோரங்கள், அதனை ஒட்டிய குடியிருப்புகள், தனியார் எஸ்டேட் பகுதிகளிலும் மழைநீர் செல்ல சரியான கால்வாய் வசதிகள் இல்லை. இதனால், பலத்த மழையின் போது, சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. சில பகுதிகளில், சிறிய அளவில் அவ்வப்போது மண் சரிவு ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிப்பு இல்லை என்றாலும், எதிரே வாகனங்களுக்கு வழிவிடுவதிலும், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. கோழிப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம், சில தினங்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது. அந்த மண்இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், டிரைவர்கள் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். டிரைவர்கள் கூறுகையில், 'சாலை ஓரங்களில் மழைநீர் கால்வாய் இல்லாமல், வழிந்தோடும் மற்றும் தேங்கும் மழை நீரால் சாலை சேதமடைகிறது. அதேபோன்று சாலை ஓரங்களில் ஏற்படும், சிறிய அளவிலான மண் சரிவுகள் அகற்றப்படுவதில்லை. போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, சாலையோரங்களில் ஏற்படும் மண்சரிவுகளை உடனுக்குடன் அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.