லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
கூடலுார்; கர்நாடகாவில் இருந்து அரிசி ஏற்றி வந்த லாரி, கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம், மைசூரு நஞ்சன்கோடு பகுதியில் இருந்து புறப்பட்ட அரிசி லாரி நேற்று, காலை, கூடலுாரை கடந்து ஊட்டி நோக்கி சென்றது. காலை, 6:00 மணிக்கு லாரி தவளைமலை கொண்டை ஊசி வளைவை கடந்து மேல் நோக்கி சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி பள்ளத்தில் உருண்டு, கீழே உள்ள சாலையில் கவிழ்ந்தது.அதில், ஊட்டியை சேர்ந்த ஓட்டுனர் நாகராஜ், 37, படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ஊட்டி, கூடலுார், கேரளா, கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பஸ், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன், லாரியை அகற்றி காலை, 11:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து காரணமாக, தமிழக - கேரளா - கர்நாடகஇடையே, 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து நடுவட்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.