சூலுார்: நீர் ஆவியாவதை குறைத்தும், களைகள் வளர்வதை தடுக்கும் 'மல்ஷிங் சீட்' எனும் மூடாக்கு முறை கோடை காலத்தில் காய்கறி பயிர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, வாழை சாகுபடிக்கு அடுத்து, குறுகிய கால பயிர்களான காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பயிர்கள் சீரான வளர்ச்சி பெறவும், அதிகபட்ச மகசூல் எடுக்கவும், சொட்டு நீர் பாசனம், அதில் உரங்களை கரைத்து பயிர்களுக்கு பாய்ச்சுதல், வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றுகின்றனர். ஆனால், நீர் விரயம், ஆவியாதல் உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயிகள் திணறும் நிலை ஏற்படுகிறது. அதுவும் கோடை காலம் என்றால், இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மூடாக்கு முறை
கோடை காலத்தில் நீர் ஆவியாவது அதிகமாக இருக்கும். அதை சமாளிக்க, 'மல்ஷிங் சீட்' எனும் மூடாக்கு முறை அதிகளவில் கைகொடுக்கும் என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடை காலத்தில் பயிர்களுக்கு பாசனம் செய்யும் நீரின் பெரும்பகுதி ஆவியாவதால் அதிகளவில் விரயமாகிறது. இதனால், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் மகசூல் பாதிக்கும். மேலும், பயிர்களுக்கு அடியில், தேவையற்ற களைகள் முளைத்து பயிர்களுக்கு கொடுக்கப்படும் உரம், தண்ணீர் உள்ளிட்டவைகளை உறிஞ்சி விடும். இதனால், பயிர்களுக்கு பாசனம் மற்றும் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைத்தடுக்க செடிகளின் வேர் பகுதியில் செயற்கை மூடாக்கு அமைக்கலாம். இதற்கான பாலித்தீன் ஷீட்கள் (மல்ஷிங் சீட்') கடைகளில் விற்பனையாகின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு, மூடாக்கு அமைப்பதால், நீர் ஆவியாவது பெருமளவு தடுக்கப்படும். குறைந்த அளவு பாசனம் செய்தால் போதுமானது. பயிர்களின் அடியில் களைகள் முளைப்பது தடுக்கப்படுகிறது. அதனால், களை எடுக்கும் செலவும் மீதமாகும். பயிர்களுக்கு கொடுக்கும் உரங்கள், சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இப்படி பல வகைகளில் நன்மை தரும் மூடாக்கு அமைக்கும் தொழில்நுட்பத்தை அமைத்து அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
50 சதவீதம் மானியம்
மல்ஷிங் சீட் எனும் மூடாக்கு முறைக்கு தேவையான பாலித்தீன் ஷீட்கள் வாங்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக, 50 சதவீதத்தை தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. 30 மைக்ரானுக்கு கீழ் உள்ள ஷீட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். பயிர்களை பொறுத்து, ஷீட்களை வாங்கி பயன்படுத்தலாம். 500 மீட்டர் ஷீட், 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு எக்டருக்கு, 32 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், அதில், 50 சதவீதமான, 16 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். மூடாக்கு முறைக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை தோட்டக்கலைத்துறையினர் வழங்கி வருகின்றனர்.