4 நாட்களுக்கு பின் முதுமலை இன்று திறப்பு
கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகம் வனம் மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாமை காண்பதற்காக, தினமும் காலை, மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் வனப்பகுதிக்குள் சவாரி அழைத்து சென்று வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் தெப்பக்காடு யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகளுக்கு, உணவு வழங்கும் காட்சி சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், தேசிய புலிகள் ஆணையத்தின் சார்பில், 2026ல், அகில இந்திய புலிகள் மதிப்பீடு குறித்து தென் மண்டல அளவிலான மூன்று நாள் பயிற்சி முகாம் காரணமாக, 23ம் தேதி முதல், 4 நாட்களுக்கு, முதுமலை மூடப்பட்டு சுற்றுலா பணிகள் நிறுத்தப்பட்டன. 24ம் தேதி, புலிகள் கணக்கெடுப்பு திட்ட பயிற்சி முகாம் துவங்கியது. முகாமை, மாநில கூடுதல் தலைமை வன உயிரின பாதுகாவலர் வேணுபிரசாத், தலைமை வகித்து துவக்கி வைத்தார். தேசிய புலிகள் ஆணையத்தின் தென் மண்டல டி.ஐ.ஜி., வைபவ் சந்திர மாத்துார், ஏ.ஐ.ஜி., ஹரிணி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், துணை இயக்குனர் கணேசன் புலிகள் கணக்கெடுப்பு முறைகள், திட்டங்கள் குறித்து விளக்கினர். பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. முகாமில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில புலிகள் காப்பக வன அதிகாரிகள், வனச்சரகர்கள், உயிரியலாளர்கள் உட்பட, 130 பேர் பங்கேற்றனர். முகாம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு பின் இன்று முதுமலை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.