கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகத்தின், பாதுகாப்பு பணிகள் குறித்து, தேசிய புலிகள் காப்பகத்தின் சார்பில், ஓய்வு பெற்ற இந்திய வன அலுவலர்கள், ஆய்வு செய்தனர்.இந்தியாவில், 54 புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என, 5 புலிகள் காப்பகங்கள் உள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு குறித்து, தேசியப் புலிகள் காப்பகத்தின் சார்பில், ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் வாசு, வினோத் குமார் யாதவ் ஆகியோர், 18ம் தேதி முதல், நேற்று வரை ஆய்வு செய்தனர்.முதல் நாள் வன அதிகாரிகள் சந்தித்து, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி (வெளிவட்டம்), ஊட்டி (உள்வட்டம்) கோட்டங்களில் வேட்டை தடுப்பு முகாம்கள், வன எல்லைகள், நீர் ஆதாரங்கள் குறித்து கள ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது முதுமலை துணை இயக்குனர்கள் வித்தியா, அருண்குமார் மற்றும் வனச்சரகர்கள், வன ஊழியர்கள் உடனிருந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், ஓய்வு பெற்ற இந்திய வன அலுவலர்கள், புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு குறித்து, பாதுகாப்பு தணிக்கை செய்தனர். வன பாதுகாப்பு குறித்த விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளது.' என்றனர்.