குன்னுாரில் மூடப்பட்ட நகராட்சி ஆரம்ப பள்ளி: மாணவர்களை வைத்து டேபிள்களை சுமக்க வைத்த அவலம்
குன்னூர்: குன்னூரில் நகராட்சி பள்ளி மூடப்பட்டு, மாணவர்களை கொண்டு டேபிள், சேர்களை சுமக்க வைத்த அவலம் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில், தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 85 அரசு துவக்க பள்ளிகள் விபரங்கள் சேகரித்து, மூடுவதற்கான பட்டியல் கடந்த பிப்., மாதத்தில் தயார் செய்யப்பட்டது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு கேட்கும் இடத்திற்கு பணியிட மாற்றமும், குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில், மாணவர் சேர்க்கை இல்லாமல் இருந்த, 25 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக, கல்வித்துறை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். குன்னூர் காரன்வால் சாலை, ஆழ்வார்பேட்டை நகராட்சி ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு, 4 மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியின் பெஞ்ச், டேபிள், சேர், ஸ்டவ், சமையல் பாத்திரங்கள், கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பொருட்களும் அட்டடி நடுநிலை பள்ளிக்கு பிக்-அப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. இதற்காக, ஓரிரு தொழிலாளர்களுடன், மாணவர்களையும் கொண்டு பொருட்களை சுமக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது. மக்கள் கூறுகையில், மவுன்ட் ரோட்டில் பள்ளிகள், வழிபாட்டு ஸ்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காமல், பள்ளிகளை மூடி வருவதுடன், மாணவர்களை வைத்து பொருட்களை சுமக்க வைப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த பள்ளியை ஊனமுற்றோர் அலுவலகத்திற்கு மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற கிராம பள்ளிகளை போன்று தனியாரிடம் நிதியுதவி பெற்றாவது மீண்டும் பள்ளியை திறக்க வேண்டும், என்றனர்.