ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட பட்டா நிலங்கள் அபகரிப்பு சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பகீர் குற்றச்சாட்டு
குன்னூர் : 'ஆதிவாசிகளுக்கு ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட பட்டா நிலங்கள், தனியார் சிலரால் அபகரிக்கப்பட்டு விட்டது,' என குன்னூரில் நடந்த மனு நீதி நாளில் புகார் தெரிவிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடந்தது. கேத்தி மேல் ஒடயரட்டியை சேர்ந்த சீத்தமாள் (65) , ஹாலம்மாள் (55) சகோதரிகள்,'ஊரை விட்டு தங்களை ஒதுக்கி வைத்துள்ள ஊர் நாட்டாமை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என மனு வழங்கினர். உபதலை ஆலோரை பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி, உபதலை பகுதி மகளிர் குழுவினர் மனு வழங்கினர்.தமிழ்நாடு ஆதிவாசிகள் நலச்சங்க பொது செயலர் சண்முக கம்பட்டன், 'நீலகிரியில் வாழும் கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் இன ஆதிவாசி மக்களுக்கு, கடந்த 1828ல், அப்போதைய பிரிட்டிஷ் அரசு, நிலம் வழங்கியது; தனியார் சிலர், அந்நிலத்தை அபகரித்து, எங்களது ஆலோசனை இல்லாமல் பட்டா செய்து கொண்டனர். அந்நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்,' என மனு வழங்கினர். 'பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது மூன்று பேர் தனித்தனியாக புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மாவட்ட கலெக்டர் கூறினார்.பர்லியார் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன்,''கே.என்.ஆர்., பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்கள் வராததால், சுற்றியுள்ள ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கின்றனர்,'' என மனு வழங்கினார். தவிர, 35 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்குமார், மாவட்ட வன அலுவலர் அனுராக் மிஸ்ரா, சமூகநல பாதுகாப்பு துணை கலெக்டர் மனோகரன், குன்னூர் ஆர்.டி.ஓ., காந்திமதி, தாசில்தார் துரைசாமி உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.