| ADDED : ஜன 11, 2024 09:58 PM
பந்தலுார்;பந்தலுாரில் கடந்த, 6-ம் தேதி, மேங்கோரேஞ்ச் பகுதியில் மூன்று வயது குழந்தையை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய கண்காணிப்பு குழு பணியாளர் இருவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களை தாக்கி வந்த சிறுத்தை, கடந்த, 6- ம் தேதி, மேங்கோரேஞ்ச் பகுதியில் மூன்று வயது குழந்தையை துாக்கி சென்றது.அந்த பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த, தேவாலா வனச்சரக யானை கண்காணிப்பு குழு வன பணியாளர் மோகன்ராஜ், சிறுத்தையை துரத்தி சென்று, குழந்தையை மீட்டு, உடனடியாக இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருடன் பணியாற்றும் ரமேஷ் என்பவரும், தேயிலை தோட்டத்தில், சிறுத்தை இருந்த இடத்தில் கூடிய பொது மக்களை, காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.இவர்கள் இருவரும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டது, அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.இதனை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. சுந்தர வடிவேல், மோகன்ராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோரை அவரின் அலுவலகத்திற்கு அழைத்து, துணிச்சலான பணிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.