ஒன்பது ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
பந்தலுார்; மாநில நல்லாசிரியர் விருதுக்கு நீலகிரியில், 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருது மற்றும் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதில், நடப்பு கல்வி ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஒன்பது ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன் விபரம்: அரவேணு உண்டு உறைவிட பள்ளி இடைநிலை ஆசிரியர் சித்ரா; மசக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவி; கக்குச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மல்லம்மாள்; சோலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா ரோசலின்; பொக்காபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பாடந்தொரை அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் நந்தகோபால்; இத்தலார் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கண்ணன்; சூலுார் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ராஜ்குமார்; உப்பட்டி எம்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். விருது வாங்க தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.