ரயில் நிலையத்தில் ஓணம் திருவிழா; சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்
குன்னுார்; குன்லுார் மலை ரயில் நிலையத்தில் ஓணம் திருவிழா சுற்றுலா பயணிகளுடன் கொண்டாடப்பட்டது. கேரளாவில், ஓணம் பண்டிகை வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக, நாடு முழுவதும் பல இடங்களிலும் ஓணம் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. இதனையொட்டி மாவேலியை வரவேற்கும் விதமாக, குன்னுார் மலை ரயிலில் ஓணம் திருவிழா நேற்று சுற்றுலா பயணிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொலிவுபடுத்தப்பட்ட பாரம்பரிய மலை ரயில் நிலையத்தில் பூக்கோலம் இடப்பட்டு, விளக்கு ஏற்றப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ஒரே வண்ண உடையணிந்து கலந்து கொண்டு ஓணப் பாட்டு பாடினர். மாவேலி வேடமணிந்து ரயில்வே ஊழியர் வந்தார். மகளிரின் திருவாதிரைகளி நடனம் அனைவரையும் கவர்ந்தது. ஓணம் திருவிழா ஓவிய போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுலாப்பயணிகளும், விழாவில் பங்கேற்று பூக்கோலம் முன்பு போட்டோக்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து 'ஓண சத்யா' எனப்படும் விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.