தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க ஊட்டி டீ மேம்பாடு அவசியம்! ராணுவம், மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும்
குன்னுார்: சர்வதேச தேயிலை தினம் நேற்று கொண்டாடிய நிலையில், 'ஊட்டி டீயை' சர்வதேச அளவில், மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2019ல் ஐ.நா., சபையால் சர்வதேச தேயிலை தினம், மே, 21ம்தேதி என அறிவிக்கப்பட்டது. 'சிறந்த வாழ்க்கைக்கான தேநீர்' என்பதை நடப்பாண்டின் கருப்பொருளாக கொண்டு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்துகிறது. ஊட்டி டீ அறிமுகம்
நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, அ.தி.மு.க., ஆட்சியில், 'ஊட்டி டீ' பெயரில், ரேஷன் கடைகளில் டீ துாள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராணுவம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கும் ஊட்டி டீயை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. எனினும், இதற்கான முயற்சிகளை சரிவர முன்னெடுக்காத காரணத்தால் அந்த திட்டம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், பல கோடி ரூபாய் செலவு செய்து தொழிற்சாலைகள் மேம்படுத்தப்பட்டன எனினும், கூட்டுறவு தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை வழங்கி, சிறந்த தேயிலை துாள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. உற்பத்தியில் மாற்றம் வேண்டும்
'நாக்கு பெட்டா' விவசாயிகள் உற்பத்தியாளர் சங்க, முதன்மை நிர்வாக அலுவலர் பாலமுருகன் கூறுகையில், ''நீலகிரியில் உள்ள, 15 கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை விட, வெளியிடங்களில் இருந்து கொண்டு வரும் 'டஸ்ட்' ரக தேயிலை துாள் 'பிளண்டிங்' செய்து, மாதந்தோறும், 250 டன் அளவில் இன்கோசர்வ் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேயிலை துாள் நுகர்வோருக்கு கிலோ, 250 ரூபாய் என விற்கப்படுகிறது. துாளை வெளியில் இருந்து வாங்குவதை விட, நீலகிரியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் மார்க்கெட்டிங்கிற்கு தேவையான டஸ்ட் ரகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு இளைஞர்களுக்கு, 'டீ மேக்கர்' இலவச பயிற்சி அரசு அளித்து அவர்களை தேர்ந்தெடுத்து தரமான உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். நம் ராணுவம், அரசு மருத்துவ மனைகளுக்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தேயிலை தின கொண்டாட்டம்
குன்னுாரில் நேற்று நடந்த, 6வது சர்வதேச தேயிலை தினத்தில், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) சார்பில், சுவை, தரம் நிறைந்த தேநீர் தொடர்பான விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் தேநீர் சுவைத்தல் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.விழாவை துவக்கி வைத்த 'உபாசி' ஆராய்ச்சி அறக்கட்டளை ஆலோசகர் டாக்டர் அசாரியா பாபு பேசுகையில், ''நம் நாட்டின் தேயிலையில் ஆரோக்கிய நன்மைகள் குறித்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது; அதன் கலாசார மதிப்பை மேம்படுத்துவது இந்த தினத்தின் முக்கிய கருப்பொருள். நாட்டின் தேயிலை அதன் தரம், பன்முகத்தன்மை உலகளவில் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்கிறது,'' என்றார். தேநீர் நுகர்வோருக்காக தேநீர் சுவைக்கும் செயல் விளக்கம் மற்றும் இலவச தேநீர் உபாசி வளாகத்தில் வழங்கப்பட்டது. அதில், நீலகிரி, வயநாடு, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில தேயிலை துாள் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில், இந்திய தேயிலை வாரிய இயக்குனர் (ஆராய்ச்சி) மஹிபால் சிங், தேயிலை தொழிற்சாலை மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் சுனில் கோயல், வைரவன், நாராயணன், சஞ்சய் ஜார்ஜ்; மேத்சன், ராஜேஷ் தாமஸ் உட்பட வளர் பங்கேற்றனர்.