நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்; சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதாக நீலகிரி கலெக்டர் அறிவிப்பு
குன்னுார் : ''நீலகிரியில் ரெட் அலர்ட் வாபஸ் பெற்று ஆரஞ்ச் அலர்டாக மாற்றப்பட்டுள்ளது; சுற்றுலா தலங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது,'' என, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறினார்.குன்னுார் காட்டேரி பூங்கா மலை பயிர் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அளித்த பேட்டி:நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட் , ஆரஞ்சு அலர்ட்' ஆக, மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஊட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் சுற்றுலா தலங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. தொட்டபெட்டா பகுதியில் மண் ஈரம் அதிகமாக உள்ள நிலையில், சரி செய்த பிறகு, நாளை (இன்று) சூழ்நிலைக்கு ஏற்ப திறக்கப்படும். நடுவட்டம் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, அங்கு மிகப்பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. எனினும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊட்டியை விட நடுவட்டம் பகுதியில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. நாளைய (இன்றைய) சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த சாலை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விழும் அபாய நிலையில் உள்ள பாறைகள் கீழே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்பகுதியில் உள்ள நீரோடை வழியாக கொண்டு செல்ல வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். இவ்வாறு, கலெக்டர் லட்சுமி பவ்யா கூறினார்.