உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமங்களுக்கு சாலை அமைக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கணும் வசூலில் இறங்கிய நபர்களால் மக்கள் அதிர்ச்சி

கிராமங்களுக்கு சாலை அமைக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கணும் வசூலில் இறங்கிய நபர்களால் மக்கள் அதிர்ச்சி

பந்தலுார்; 'பந்தலுார் அருகே, சாலை அமைக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்,'என, வசூலில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மானிவயல், பாலாப்பள்ளி, ஸ்கூல் மட்டம் பகுதிகள் உள்ளன. அங்கு, 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதில், மானிவயல் முதல் பாட்டவயல் செல்லும் சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால், அதனை சீரமைத்து தர இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது, சாலையை சீரமைக்க, கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில், முதலமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் நடக்கும் நிலையில் உள்ளது.இந்நிலையில், 'சாலை பணி துவங்க வேண்டுமானால், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்,' என கூறி, ஒரு குழுவினர், ஒரு வீட்டிற்கு தலா, 500 ரூபாய் வீதம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வருக்கு, பொது மக்கள் புகார் அனுப்பி உள்ளனர். கூடலுார் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ்குமார் கூறுகையில், ''பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை, கிணறு, நடைபாதை உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக யாரும் எந்த பணமும் வாங்குவது கிடையாது. மக்களின் புகாரை தொடர்ந்து, வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் குறித்து, போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வசூல் செய்யும் நபர்கள் குறித்து மக்கள் எங்களிடம் நேரடியாக புகார் அளிக்க முன் வர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ