| ADDED : நவ 25, 2025 05:51 AM
கூடலுார்: புலி தாக்கி இறந்த பெண்ணின் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், மசினகுடி மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் நாகியம்மாள், 60. இவர், உட்பட மூன்று பெண்கள் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். மதியம், 2:40 மணிக்கு திடீரென அங்கு வந்த புலி, நாகியம்மாளை கவ்வி சென்றது. இதை பார்த்த உடன் சென்றவர்கள், புலியை விரட்ட சப்தமிட்டனர். எனினும், புலி அந்த பெண்ணை துாக்கிச் சென்றது. அப்பகுதி மக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவனல்லா ஆற்றின் அருகில், நாகியம்மாள் உடல் மற்றும் தலை தனித்தனியாக கிடந்தன. அங்கு வந்த வன ஊழியர்கள், அந்த பெண் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்வதற்காக, தனியார் ஆம்புலன்சில் ஏற்றினர். அங்கு கூடியிருந்த மக்கள், புலியிடமிருந்து பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வன ஊழியர்கள் உறுதியளித்ததை அடுத்து, ஆம்புலன்சை பொதுமக்கள் விடுவித்தனர். வனத்துறையினர், 'ட்ரோன்' உதவியுடன், புலியின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கின்றனர்.