உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லேம்ஸ்ராக் சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் மீது சீரமைப்பு பணி: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

லேம்ஸ்ராக் சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் மீது சீரமைப்பு பணி: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

குன்னுார்: குன்னுார்-லேம்ஸ்ராக் சாலையில், பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் மீது தரமில்லாமல், சாலை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குன்னுார் நகராட்சி சார்பில், லேம்ஸ்ராக் செல்லும் சி.எம்.எஸ்., சாலை, ஆப்பிள்பீ சர்ச் சாலை, குமரன் நகர் சாலைகளை சீரமைக்க, 1.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், நகராட்சிக்கு உட்பட்ட லேம்ஸ்ராக் செல்லும் சி.எம்.எஸ்., சாலை சீரமைக்கும் பணிகள், கடந்த, 20 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியது. இங்கு மழைநீர் பாதிப்பு ஏற்படும் இடங்களில் சேதமடையாமல் இருக்க ஏற்கனவே அமைக்கப்பட்டு தரமான நிலையில் உள்ள 'இன்டர்லாக்' கற்கள் மீது பெயரளவிற்கு 'சிமென்ட்' கொட்டப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடந்தன. இதனை கண்ட மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, தரமாக பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினர். இதன் திட்ட மதிப்பீடு குறித்த கேள்விக்கு, இந்த சாலைக்கு எவ்வளவு தொகை என்பதை நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்காமல் இருந்ததால் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து, வாக்குவாதம் செய்து, புகார் தெரிவித்தனர். மக்கள் கூறுகையில், 'மழை நீர் அதிகளவில் சென்று பாதிப்பு ஏற்படும் இடங்களில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டதில் பாதிப்பு இல்லாமல் உள்ளது. இதன் மீது பெயரளவிற்கு 'சிமென்ட்' கலவை கொட்டி சீரமைத்தால் விரைவில் பெயர்ந்து பாதிப்பு ஏற்படும். இங்குள்ள இன்டர்லாக் கற்களை அகற்றாமல், இதில் மீதமாகும் நிதியில், மழைநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்த வேண்டும், தரமாக சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்,' என்றனர். தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில், சாலை சீரமைப்பு பணியால் நேற்று பஸ்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பல 'டிரிப்'கள் ரத்து செய்யப்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டது. கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை