தோடர் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி
ஊட்டி; ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட குந்தகோடுமந்து பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை நலத்திட்ட நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: மாநில அரசு பொதுமக்கள் பயன்பெறு வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில், நீலகிரியில் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த அரசால் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட மந்து பகுதியில் ஆனைக்கல்மந்து, குந்தகோடு மந்து உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டோம். இந்த கிராமம் மிகவும் ஆழகாக உள்ளது. அடுத்த தலைமுறையினரும் தங்களது பாரம்பரிய பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும். தங்களது மந்து பகுதியில் உள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 2.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 47 தோடர் பழங்குடியினருக்கு பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ், வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ் தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.