விரட்டி வந்த யானை; உயிர் தப்பிய போலீஸ்
பந்தலுார்: பந்தலூர் அருகே சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் யோகேஸ்வரன்,29. இவர் நேற்று காலை பந்தலுார் நீதிமன்ற பணிக்காக, தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது சேரம்பாடி- சாலையில், மண்டசாமிகோவில் என்ற இடத்தில் வந்தபோது, வனப்பகுதியில் இருந்து சாலைக்கு யானை ஒன்று வந்துள்ளது. யானை அவரை விரட்டிய போது, பைக்கை கீழே போட்டுவிட்டு ஓடி உயிர் தப்பியுள்ளார். அப்போது, இவரின் பைக்கை மிதித்த யானை, சாலையோரம் சென்றது. தகவலறிந்த வனவர் முத்தமிழ், வனக்காப்பாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட வனக்குழுவினர் வந்து, யானையை விரட்டி உள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்சில் போலீசை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார். மண்டசாமி கோவில் பகுதியில் வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.