சாலையின் நடுவில் குழி; மக்களுக்கு இடையூறு
கோத்தகிரி; கோத்தகிரி தாலுகா அலுவலக சாலையின் நடுவில் குழி ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, தாலுகா அலுவலகம் வழியில், நீதிமன்றம், தொலைபேசி நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நூலகம் என, அரசு அலுவலகங்கள் உள்ளன. தவிர, நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதனால், இவ்வழித்தடத்தில், வாகன போக்குவரத்துடன், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இச்சாலையில், தண்ணீர் குழாய்கள் பதிக்க குழிகள் வெட்டப்பட்டு, பணி நிறைவடைந்த நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் திடீர் குழி ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சம் அடைந்த மக்கள், நடந்து செல்வோர் மற்றும் வாகன டிரைவர்கள் நலன் கருதி, குழியில் குச்சி ஊன்றி, தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, குழியை சமன் செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.